சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார். இவர் மீது கடந்த  28.06.2025 அன்று நகை திருடியதாக நிகிதா என்பவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விசாரணையின்போது போலீசார் அவரை தாக்கியதில் ஜூன் 29ஆம் தேதி  உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது.

Advertisment

தொடர் போராட்டங்களுக்கு பிறகு இந்த வழக்கை தமிழக அரசு சிபிஐ விசாரிக்கும் என்று அறிவித்திருந்தது. அதோடு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையும், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் வழக்கு தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருந்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நிகிதா மற்றும் அஜித்குமாரின் குடும்பத்தினர் மற்றும் மடப்புரம் கோவில், அஜித்குமார் தாக்கப்பட்ட இடம், கடை என பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் சிறையில் உள்ள ஐந்து காவலர்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க  சிபிஐ முயன்று வருகிறது. இது தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிஐயின் இந்த மனு நாளை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.