மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராகப் பதவி வகித்து வந்தவர் அஜித்பவார். இத்தகைய சூழலில் தான் பூனே மாவட்டத்தில் உள்ள பாராமதி என்ற இடத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மும்பையில் இருந்து சிறிய ரக தனி விமானத்தில் இன்று (28.01.2026) பயணம் மேற்கொண்டார். அதன்படி இந்த விமானம் காலை 08.45 மணியளவில் பாராமதியில் தரையிறங்க முயன்றது. அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட தகவல் வெளியானது. 

Advertisment

இந்த விபத்தில் சிக்கிய விமானம் தீ பற்றி எரிவது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் அஜித்பவார் மரணம் அடைந்தார். மேலும் 2 உதவியாளர்கள் (தனி பாதுகாப்பு உதவியாளர் மற்றும்  உதவியாளர்) மற்றும் 2 பணியாளர்கள், துணை முதல்வர் அஜித்பவார் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். அஜித்பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, அஜித் பவார் மறைவையொட்டி அவரது  குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அஜித்பவாரின் திடீர் மறைவால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். மகாராஷ்டிராவின் துணை முதல்வரும் அவரது சக பயணிகளும் இன்று காலை பாராமதியில் நடந்த ஒரு பேரழிவு தரும் விமான விபத்தில் உயிரிழந்தனர். நான் மிகுந்த இழப்பை உணர்கிறேன். 

mh-ajith-pawar-flight

அவரது சித்தப்பா சரத்பவார் உட்பட அவரது குடும்பத்தினருக்கும், மறைந்த அஜித் பவாரின் நண்பர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை தேவை” எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் மம்தா பானர்ஜி அளித்த பேட்டி ஒன்றில், “யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சரத்பவாருடன் அஜித்பவார் மீண்டும் இணைய இருந்த நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. விமான விபத்தில் அஜித்பவார் உயிரிழந்தது குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும்; எங்களுக்கு உச்சநீதிமன்ற விசாரணை மீது மட்டுமே நம்பிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisment