ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்துள்ளதாகவும், இந்தியா மிக அதிகமான வரி விதிப்பதாகவும் கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25% வரி விதிக்கப்படுவதாக கடந்த 30ஆம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். அமெரிக்காவில் இருந்து பால், நெய், கோதுமை, சோயாபீன்ஸ், ஆப்பிள், திராட்சை, சோளம் உள்ளிட்ட வகைகளை இந்தியாவில் விற்பனை செய்ய அந்த நாடு அனுமதி கோரியதாகவும், இவை அனைத்தும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தாணியங்கள் அதனால் இந்தியாவின் விவசாயிகள் நலன் பாதிக்கப்படும் என்று இந்தியா கூறி அதற்கு மறுத்ததாகவுன் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியா பொருட்களுக்கு 25% வரி விதிப்பு அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. இதனிடையே, இந்தியாவை டிரம்ப்ன் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இந்தியா பொருளாதாரம் இறந்து போய்விட்டதாகவும், உலகிலேயே அதிக வரியை இந்தியா விதிப்பதாக டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். இந்தியா குறித்து டிரம்ப் விமர்சித்தது குறித்து பிரதமர் மோடி உட்பட எந்த ஒன்றிய அமைச்சரும் பதிலளிக்காமல் மறுத்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், கூடுதல் வரியாக 25 சதவீதத்தை உயர்த்தி இந்தியாவுக்கு மொத்தமாக 50% வரி விதிப்பதாக டிரம்ப் நேற்று முன் தினம் (06-08-25) அதிரடியாக அறிவித்தார். வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி பிரதமர் மோடி சீனா டெல்ல உள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அதிபர் டிரம்புக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்தார்.
இந்த பரபரப்பான நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், நேற்று (07-08-25) ரஷ்யாவுக்குச் சென்று அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது இந்தியா - ரஷ்யா இடையிலான பலதரப்பு மன்றங்களின் ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் தோவல், “இரு நாடுகளுக்கு இடையில் சிறந்த உறவுகள் மற்றும் நீண்ட உறவு உறவுகள் உள்ளது. எங்களுக்கு உயர்மட்ட ஈடுபாடுகள் உள்ளன. இவை மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன” என்று கூறினார். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்துள்ளாதால் இந்திய பொருட்கள் மீது 50% வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்துப் பேசியது உலக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.