கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு தான் காரணம் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற தாக்குதலை இந்தியா மேற்கொண்டிருந்தது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக கடந்த மே 10ஆம் தேதி இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது. அதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்கள் தவறான செய்தி பரப்புவதாகவும், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற 66வது பட்டமளிப்பு விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நாம் நமது உள்நாட்டு தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டது. அதில், எவ்வளவு உள்நாட்டு கட்டமைப்பு இருந்தது என்பதில் நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். சில சிறந்த அமைப்புகள் இருந்தன என்பதில் நாம் பெருமைப்படுகிறோம், அது பிரம்மோஸ் ஏவுகணைகளாக இருந்தாலும் சரி, அது நமது ஒருங்கிணைந்த வான் கட்டுப்பாடு மற்றும் கட்டளை அமைப்பாக இருந்தாலும் சரி, அது நமது ரேடார்கள் ஆக இருந்தாலும் சரி. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது நாம் துல்லிய தாக்குதல் நடத்தினோம். பிரமோஸ் ஏவுகணை மூலம் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத இலக்குகளை 23 நிமிடங்களில் தாக்கி அழித்தோம்.
நாங்கள் யாரையும் தாக்கவில்லை, எங்கும் தாக்கவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் போன்ற வெளிநாட்டு ஊடகங்கள் எழுதியுள்ளது. அதே போல், பாகிஸ்தான் அதை செய்ததாகவும் இதை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். நான் அந்த ஊடகங்களுக்கு சவால் விடுகிறேன். எந்த இந்திய கட்டமைப்பு சேதம் ஏற்பட்டுள்ளது? என்பதை ஒரு புகைப்படத்தை காட்ட முடியுமா? ஒரு கண்ணாடி உடைந்த படத்தையாவது உங்களால் காட்ட முடியுமா?. ஆனால், மே 10 ஆம் தேதிக்கு முன்னும் பின்னும் பாகிஸ்தானில் 13 விமானத் தளங்கள் மட்டுமே காட்டப்பட்டுகின்றன. சர்கோதா, ரஹீம் யார் கான், சக்லாலா என எதுவாக இருந்தாலும் சரி வெளிநாட்டு ஊடகங்கள் படங்களின் அடிப்படையில் வெளியிட்டதை மட்டுமே நான் உங்களுக்குச் சொல்கிறேன். பாகிஸ்தான் விமான தளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்த நம்மால் முடியும்” என்று தெரிவித்தார்.