பாமக நிறுவனர் ராமதாஸுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கடந்த 06ஆம் தேதி (06.09.2025) அங்கு வந்திருந்தார். அப்போது, டிஜிபி அலுவலக நுழைவு வாயிலில் 4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கியது. முன்னதாக ஏர்போர்ட் மூர்த்தி, விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வந்ததாகவும், அதனால் தான் மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் 4 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விசிகவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. மேலும் திருமாவளவன் தூண்டுதலின் பேரில் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மெரினா காவல் நிலையத்தில் ஏர்போர்ட் மூர்த்தி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசிகவினர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மற்றொரு புறம் விசிக பிரமுகர் திலீபன் என்பவர் ஏர்போர்ட் மூர்த்தி ஆயுதங்கள் மூலம் தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் மூர்த்தியை 7ஆம் தேதி அடையாற்றில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
அதோடு அவர் மீது ஆபாசமாகப் பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது இந்த தாக்குதல் சம்பவத்தின் போது ஏர்போர்ட் மூர்த்தி தன் கையில் வைத்திருந்த கத்தி மூலம் திலீபனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் அவரை கைது செய்து போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறி அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்தனர். அதன் பின்னர் சென்னை பெருநகர எழும்பூர் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஏர்போர்ட் மூர்த்தியை ஆஜர்ப்படுத்தினர். அப்போது நீதிபதி அவருக்கு வரும் 22ஆம் தேதி (22.09.2025) வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறபித்த்திருந்தார். இதனையடுத்து ஏர்போர்ட் மூர்த்தியைப் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இத்தகைய சூழலில் தான் புழல் சிறையில் இருக்கும் ஏர்போர்ட் மூர்த்தியைக் குண்டர் சட்டத்தில் அடைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவைச் பெருநகர சென்னை காவல் ஆணையர் அருண் பிறப்பித்திருந்தார். அதன்படி ஏர்போர்ட் மூர்த்தியைக் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான ஆவணங்கள் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இதற்கிடையே ஏர்போர்ட் மூர்த்தி தனக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/15/judgement-2025-09-15-19-21-48.jpg)
தன்னை தாக்கியது தொடர்பாக அளித்த புகாரில் எதிர் தரப்பில் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் தனக்கு எதிராக மட்டுமே இந்த கைது நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (15.09.2025) இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், “ஏர்போர்ட் மூர்த்தி ஏற்கனவே குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே அவரது ஜாமீன் மனுவை ஏற்க முடியாது” எனத் தெரிவித்து ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
  
 Follow Us