புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, கடந்த ஆறாம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளிக்க வந்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டிஜிபி அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது, அலுவலக நுழைவு வாயிலில் நான்கு பேர் கொண்ட கும்பல் அவரைத் சரமாரியாக தாக்கியது.
ஏர்போர்ட் மூர்த்தி, விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வந்ததாகவும், அதனால் தான் இந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விசிகவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது . பின்னர், அந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது.
டிஜிபி அலுவலகத்தின் வாயிலில், காவல்துறையின் முன்னிலையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியிது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து 'விசிக தலைவர் திருமாவளவன் தூண்டுதலின் பேரில் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக' ஏர்போர்ட் மூர்த்தி மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஏர்போர்ட் மூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசிகவினர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் விசிக பிரமுகர் திலீபன் என்பவர் ஏர்போர்ட் மூர்த்தி ஆயுதங்கள் மூலம் தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் மூர்த்தியை போலீசார் வீட்டுக்கே சென்று கைது செய்துள்ளனர். ஏர்போர்ட் மூர்த்தி மீது ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.