இந்தியாவிற்கு வருகை தந்திருந்த தென்கொரியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது நாட்டிற்குத் திரும்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தார். அதன்படி, விமானத்தில் செல்வதற்காகப் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அந்த விமான நிலையத்தில் ஆபான் அகமது என்பவர் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று பணியில் இருந்த விமான நிலைய ஊழியர் ஆபான் அகமது, அப்பெண் பயணியின் உடைமைகளை பரிசோதித்துள்ளார்.
மேலும், அவரது பையில் உள்ள பொருட்களைச் சோதனையிட வேண்டும் எனக் கூறி, அவரை ஆண்கள் கழிவறைக்குத் தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அந்தப் பெண் பயணியைச் சோதனை செய்வதாகக் கூறி தனியாக அழைத்துச் சென்ற அவர், அங்கு அப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அந்தப் பெண் விமான நிலைய நிர்வாகத்திடம் இது குறித்து புகார் அளித்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து, விமான நிலைய ஒப்பந்த ஊழியரான ஆபான் அகமதுவை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து உரியச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow Us