ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் கலக்கத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கே.சி. வேணுகோபால், கொடிக்குனல் சுரேஷ் உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் உட்பட 181 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று (10.08.2025) இரவு 08:15மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டது. இந்நிலையில் இந்த விமானம் பெங்களூரை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் இயந்திரத்தில் திடீரன கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானி மூலம் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் சுமார் 2 மணி நேரமாக வானில் வட்டமடித்த பின்னர் இரவு 11:20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அதனைத் விமானத்தில் பழுது பார்க்கும் பணி நடைபெற்றது. இருப்பினும் இந்த பணி முடியாததால் 2 மணி நேரம் தாமதமாக மாற்று விமானத்தில் பயணிகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதே சமயம் இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து ஆணையகம் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.