கடந்த 12.06.2025 அன்று மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது புறப்பட்ட 10வது நிமிடத்திலேயே விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகள் என 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விமானம் விழுந்ததில் மருத்துவ கல்லூரியின் மாணவர்களின் விடுதி பலத்த சேதமடைந்தது. விபத்தின் போது விடுதியில் இருந்த மாணவர்கள் சிலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது இந்த விபத்து சம்பவம். விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு தொடர்ந்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த விமான விபத்து தொடர்பாக 15 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை அதிகாரப்பூர்வமாக விமான விபத்து புலனாய்வு பணியகம் வெளியிட்டுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 32 நொடிகளிலேயே 2 என்ஜின்களும் நின்றுபோனது தெரியவந்தது. என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது தடை செய்யப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எஞ்சினுக்குள் எரிபொருள் செல்லாதது குறித்து பைலட்கள் இருவரும் பேசிக் கொண்டது காட்பிட் வாய்ஸ் ரெக்கார்டிங் குரல் பதிவு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது விமான விபத்து புலனாய்வு பணியகம்.