“தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை திரும்பப்பெற வேண்டும்” -அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி

104

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை திரும்பப் பெறக் கோரி அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி(AIESEC) வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசாங்கம் 2022 யில் நீதிபதி முருகேசன் அவர்கள் தலைமையில் அமைத்த  உயர்நிலைக்  குழு 2024 யில் அரசாங்கத்திடம் தான் தயாரித்த கல்விக் கொள்கையை அளித்தது. மாணவர்களின்  எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான ஒரு கல்விக் கொள்கையை  பொது வெளியில் வைத்து அனைவரின் கருத்துக்களைக் கேட்காமலும் சட்டமன்றத்தில் கூட வைத்து எந்த விவாதமும் நடத்தாமலும் தன்னிச்சையாக மாநிலக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கும் ஜனநாயக விரோதச் செயலாகும்.

தமிழ்நாடு அரசாங்கத்தால் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் தேசியக் கல்விக் கொள்கை 2020 யின் பல்வேறு திட்டங்களான எண்ணும் எழுத்தும் திட்டம், மணற்கேணி,    இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், திறன் மேம்பாடு, அனுபவக் கற்றல், ஒப்பார் கற்றல், எண்மக் கற்றல் (இணைய வழிக் கல்வி), மாதிரி பள்ளிகள் போன்ற பல திட்டங்களை தொகுத்து வழங்கி  இருக்கும் இந்த அறிக்கை ஒருக்கல்விக்கொள்கையின் எந்த அடிப்படைக் கூறுகளையும் கொண்டிருக்கவில்லை. மேற்கண்ட திட்டங்கள் யாவும் கல்வி விரோத, மாணவர் விரோதத் திட்டங்கள் என கல்வியாளர்கள், ஆசிரியர்கள் விமர்சித்து வந்த வேளையில் அதையே கல்விக் கொள்கையில் அறிவித்திருப்பது இந்தக் கொள்கையின் ஜனநாயக விரோத அனுகுமுறையை காட்டுகிறது.

ஏற்கனவே கடந்த 15 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணி இடங்களை நிரப்பாமல் பல பள்ளிகள் ஓராசிரியர் அல்லது ஈராசிரியர் பள்ளிகளாக தத்தளித்து வருவதைப் பற்றி இந்த கல்விக் கொள்கை வாயே திறக்காததோடு ஆசிரியர் மாணவர் விகிதத்தைப் பற்றிக் கூட எதுவும் கூறாமல் இருப்பது ஒரு கல்விக் கொள்கையின் எந்த அடிப்படை சாராம்சத்தையும் அதுக் கொண்டிருக்கவில்லை என்பதையே மீண்டும் உணர்த்துகிறது.

பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத சூழலில் மாணவர்களின் எழுதும் வாசிக்கும் திறனும் கணிதத்திறனும் தோல்வி அடைந்து விட்டதாக பல அகில இந்திய ஆய்வுகள் அறிவித்த பின்னரும் கூட வகுப்பு 1 முதல் வகுப்பு 8 வரை கட்டாயத் தேர்ச்சித் திட்டத்தை தொடரப் போவதாக  இக்கல்விக் கொள்கை மூலம் அறிவித்திருப்பது மேலும் அதிர்ச்சியூட்டுவதாய் அமைந்துள்ளது. 

இதுமட்டுமின்றி கல்வி உரிமைச் சட்டம் 2009 யின் ஒரு முக்கிய அம்சமான பள்ளி மேலாண்மைக் குழுத் திட்டம், நம்ம ஊரு நம்ம ஸ்கூல் திட்டம், பெரு நிறுவனங்களின் சமூகப் பங்களிப்புத் திட்டம், முன்னாள் மாணவர்கள் பங்களிப்புத் திட்டம், கல்வியில் சமூக ஆர்வலர்களின் பங்களிப்பு போன்ற திட்டங்களின் மூலம் மாநில அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்பையும் பொறுப்பையும்  படிப்படியாக குறைக்கும் ஒரு திட்ட வரைபடமாகவே (Blue Print) தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை அமைந்துள்ளது. 
   
கல்விக்காக தமிழ்நாடு அரசாங்கம் 13.7% நிதி ஒதுக்குவதாகப் பெருமை அடித்துக் கொண்டாலும் அது ஒதுக்கி வரும் நிதி போதுமானதாக இல்லை என்பதே உண்மை. அதை ஒப்புக் கொள்ளாமல்  பள்ளிகளின் அன்றாடத் தேவைகளுக்காகவும் ஆதாரங்களுக்காகவும் மேற்கண்ட வகையில் பொது வெளியில் நிதி திரட்ட ஒரு கல்விக் கொள்கையே முன்மொழிந்து இருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது. இது அரசுப் பள்ளிக் கட்டமைப்பை சிதைத்து  கல்வியில் தனியார்மயத்தையும் வியாபாரமயத்தையும் ஊக்குவிக்கும் போக்கேயாகும் என்பதில் ஐயமில்லை. 

எனவே தமிழ்நாடு அரசாங்கம் நீண்ட காலதாமதத்திற்குப் பின் தேர்தல் நெருங்கும் வேளையில் அவசர கதியில் வெளியிட்டிற்கும் இந்தக் கல்விக் கொள்கையை திரும்பப் பெற்று அதனை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும். அனைத்துத்தரப்பு மக்களின் கருத்துக்களைப் பெற்று உரிய திருத்தங்களை மேற்கொண்டு அடித்தட்டு தமிழ்நாட்டு மக்களின், ஆசிரியர்களின், மாணவர்களின்  விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு நியாயமான, ஜனநாயகப்பூர்வ, அறிவியல்பூர்வக் கல்விக்  கொள்கையாக மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட தமிழ்நாடு அரசாங்கத்தை அகில இந்திய கல்விப் பாதுக்காப்புக் கமிட்டி வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

NEW EDUCATION POLICY tn govt
இதையும் படியுங்கள்
Subscribe