AIADMK, TVK did not participate despite invitation struggle held by Anbumani
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. குறிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி மக்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாததால் திமுக அரசை கண்டித்தும், உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னையில் 17ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக பா.ம.க தலைவர் அன்புமணி சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த போராட்டத்தில் திமுகவை தவிர அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை வைத்து அதிமுக, பா.ஜ.க, தவெக, அமமுக, நாதக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், சென்னை எழும்பூரில் அன்புமணி தலைமையில் அனைத்து கட்சி போராட்டம் இன்று (17-12-25) போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ஜ.க சார்பில் கரு.நாகராஜன், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் என்.ஆர். தனபாலன், புரட்சி பாரதம் கட்சியின் எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, அமமுகவின் செந்தமிழன், சி.ஆர்.சரஸ்வதி, நாம் தமிழர் கட்சி சார்பில் களஞ்சியம், உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும் பா.ம.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அன்புமணி உள்ளிட்ட பிற கட்சி பிரதிநிதிகள் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, தவெக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. இந்த போராட்டத்தில் பங்கேற்க அதிமுக, தவெக ஆகிய கட்சிகளுக்கு பா.ம.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us