அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதாகக் கூறி அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆரின் முதல் சட்டமன்றக் குழுவிலேயே எம்.எல்.ஏவாகவும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் பல்வேறு முக்கிய பதவிகளிலும் பொறுப்பு வகித்த மூத்த தலைவர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியிருப்பது தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisment

இதற்கிடையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களைச் சந்தித்து செங்கோட்டையன் கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும், அவர் திமுகவின் பி டீம் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். அதே போல், எடப்பாடி பழனிசாமியின் முடிவின் காரணமாக தான் பல்வேறு தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததாகவும், அவர் கொடநாடு வழக்கின் ஏ1 குற்றவாளி என்றும் செங்கோட்டையன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Advertisment

இப்படி மாறி மாறி குற்றச்சாட்டை முன்வைத்து வரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், வரும் 5ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.