AIADMK takes a stand against Vijay and Natham Viswanathan criticizes
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தவெக தலைமையில் தான் கூட்டணி, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த கூட்டத்தில் பேசிய விஜய், திமுகவையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக, 2026ல் திமுக - தவெக இடையே தான் போட்டி என்று கூறினார்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு, அதிமுகவுடன் விஜய் கூட்டணி வருவார் என்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் நம்பியிருந்த வேளையில், விஜய் முதல்வர் வேட்பாளர் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், தவெக - திமுக இடையே தான் போட்டி என்று விஜய் கூறியதும் அதிமுகவிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விஜய்யை இதுவரை விமர்சிக்காமல் இருந்த அதிமுக தலைவர்கள், தற்போது தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 7ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன் இன்று தவெக தலைவர் விஜய்யை விமர்சனம் செய்துள்ளார். அதிமுக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நத்தம் விஸ்வநாதன், “இன்னைக்கு யார் யாரோ புதுசா கிளம்பி இருக்காங்க. ஏதோ 10 படம் ஓடுனாலே நாம் முதலமைச்ச்சர் ஆகிவிடலாம் என்பது போல ஒரு மாய எண்ணத்தில் இருக்கிறார்கள். பாவம், எந்த அனுபவமும் இல்லாதவர்கள் கூட இன்றைக்கு திமுக எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார்கள் என்றால் அவர்களை வாழ்த்தலாம். ஆனாலும், ஆட்சி பொறுப்பிற்கு வரக்கூடிய அளவிற்கு அவர்களுக்கு பக்குவமும், பட்டறிவும் அல்லது அரசியல் அறிவும் அனுபவமும் இன்னும் பயிற்சி பெற வேண்டும்.
அதற்கு முன்னதாகவே அவசரப்பட்டு வந்த உடனேயே நான் தான் முதலமைச்சர், நான் தான் முதலமைச்சர் என்று வருவதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே, எப்போதும் பக்குவமான, பழக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த அதிமுக ஆட்சி தமிழகத்தில் வருவது தான் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு. எனவே, நீங்கள் எல்லாம் சிந்தித்து செயலாற்றி வருகின்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்ல ஆட்சியை நாம் உருவாக்கிட வேண்டும்” என்று கூறினார்.
கட்சி ஆரம்பித்து 2 வருட காலத்தில் தவெகவையோ, விஜய்யையோ விமர்சிக்காமல் இருந்த அதிமுக தலைவர்கள், தற்போது விஜய்யை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் களத்தில் திமுக - அதிமுக - தவெக என்ற மும்முனை போட்டி அமைந்துள்ளது.
Follow Us