2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, மாநிலத்தின் பிரதான அரசியல் கட்சிகள் இந்த ஆண்டு தொடக்கம் முதலே தீவிரமாகத் தயாராகி வருகின்றன. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் (விசிக), மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) ஆகிய கட்சிகள் மீண்டும் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. மறுபுறம், எதிர்க்கட்சியான அதிமுக, பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மேலும், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

இதனிடையே எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழக மக்களை சந்தித்து வருகிறது. இந்த சூழலில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் இடம்பெறவில்லை என்று குற்றம் சாட்டிய, செங்கோட்டையன் டெல்லி சென்று பா.ஜ.க தலைவர்களை சந்தித்தார். அந்தச் சந்திப்புக்குப் பிறகு, அமித் ஷாவின் தமிழக வருகையைத் தொடர்ந்து அதிமுக-பா.ஜ.க. கூட்டணி உறுதியானது. இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி-செங்கோட்டையன் விவகாரம் தற்காலிகமாக அமைதியானது.

இந்த நிலையில், இருவருக்கும் இடையே மீண்டும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், வரும் 5-ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில்  மனம் திறந்து பேசவுள்ளேன். அதுவரை அனைவரும் பொறுத்திருங்கள்," என்று தெரிவித்தார். கடந்த ஆறு மாதங்களாக நீடித்து வரும் இந்த மோதல் விவகாரத்துக்கு செங்கோட்டையன் 5-ஆம் தேதி முற்றுப்புள்ளி வைப்பார் எனக் கூறப்படுகிறது.