AIADMK polling agents hold consultation meeting in Chidambaram
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் வடக்கு மெயின்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (06-11-25) நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், மாவட்ட பொருளாளர் தோப்பு கே.சுந்தர், இணைச் செயலாளர் எம்.ரெங்கம்மாள், துணைச் செயலாளர் செல்வம், மாவட்ட பாசறை செயலாளர் ஆர்.ஜெ.வசந்த், இளைஞரணி செயலாளர் ஆர்.முருகையன், ஐ.டி.விங் செயலாளர் எள்ளேரி பிரபு, கலை பிரிவு செயலாளர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஆர்.செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் கழக மீனவர் பிரிவு இணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.ஜெயபால் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், “வருகின்ற 2026 ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் 21 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கடந்த 4 ஆம் தேதி முதல் வருகின்ற டிசம்பர் 4 வரை மேற்கொள்ள உள்ளது. இப்பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் அந்தந்த வாக்குசாவடிகளில் கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குசாவடி நிலை முகவர்கள் பணியாற்ற வேண்டும். மேலும் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்காளர்களை சரிவர பட்டியலில் இடம் பெற செய்யவும், இரட்டை பதிவுடைய வாக்காளர்கள் மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளதா? என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என்றார்.
கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள் வை.சுந்தரமூர்த்தி, ப.அசோகன், பேராசிரியர் ரெங்கசாமி, பேரூர் கழக செயலாளர் தமிழரசன், முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் வாசுதேவன், நகர கழக துணை செயலாளர் அரிசக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம் நன்றி கூறினார்
Follow Us