தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை இன்று (07-01-26) பா.ம.க தலைவர் அன்புமணி சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உடனிருந்தார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக அன்புமணி சந்தித்து பேசினார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் மூலம் அதிமுக - பா.ம.க கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பா.ம.கவுக்கு அதிமுக 15 தொகுதிகள் வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், 20க்கும் மேற்பட்ட இடங்களை வழங்க வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர், எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புமணி இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஏற்கெனவே அதிமுக பா.ஜ.க கூட்டணி அமைக்கபட்டிருக்கிறது. தற்போது எங்கள் கூட்டணி பா.ம.க இடம்பெற்றுள்ளது. மேலும் சில கட்சிகள் கூட்டணியில் சேர்வார்கள். எங்கள் கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டனி. அதிமுக, பா.ஜ.க, பா.மக ஆகியவை கூட்டணியாக இணைந்துள்ளன. அதிமுக பா.ம.க தொண்டர்கள் விரும்பிய கூட்டணி அமைந்துள்ளது. இரு கட்சிகளும் விரும்பி இந்த கூட்டணியை அமைத்துள்ளோம், இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்துவிட்டோம், எத்தனைகள் தொகுதிகள் என்பது உள்ளிட்ட மற்றவைகள் பின்பு அறிவிப்போம்” எனத் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அன்புமணி பேசியதாவது, “அதிமுக தலைமையிலான கூட்டணி பா.ம.க இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளது. எங்களுக்கு மகிழ்ச்சியான தருணம். எங்கள் தொண்டர்கள் விரும்பிய கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம். எங்களுடைய நோக்கம் மக்கள் விரோத திமுக ஆட்சி, ஊழல் செய்கிற ஆட்சி, சமூகநீதிக்கு எதிரான ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணியில் இணைந்திருக்கிறது. மிகப்பெரிய வெற்றியை பெற இருக்கிறோம்” என்று கூறினார். ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா என்று கேள்விக்கு எடப்பாடி பழனிசாமியும், அன்புமணியும் பதிலளிக்க மறுத்து அங்கிருந்து சென்றுவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/07/admkpmk-2026-01-07-10-06-50.jpg)