தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த விவாதங்கள் கடந்த 4 மாதங்களாக கூட்டங்கள் நடைபெறாமல் போனது. முன்னாள் நகர மன்றத் தலைவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதிலும், அதன் பின்னர் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலிலும் கடந்த நான்கு கூட்டங்களில் விவாதங்கள் நடைபெறவில்லை. இதில் புதிதாகப் பொறுப்பேற்ற நகர மன்றத் தலைவர் கௌசல்யா முதல் முறையாகத் தலைமை ஏற்கும் கூட்டம் என்பதால் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா கூட்டத்தில் வந்து வாழ்த்து தெரிவித்துச் சென்றார்.
நகராட்சி ஆணையாளர் சேம் கிங்ஸ்டன் முன்னிலையில் நடைபெற்ற நகர மன்றக் கூட்டத்தில் முன்னாள் நகர மன்றத் தலைவி உமாமகேஸ்வரி தவிர மற்ற 29 நகர மன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். பேருந்து நிலையம் முதல் புளியங்குடி சாலை வரை புதிதாகத் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தைக் காண்பிக்கப்படாமல் இதில் தீர்மானம் நிறைவேற்றுகிறீர்களா என்பது குறித்தும், பேருந்து நிலையத்தில் நிழற்குடை, மார்க்கெட் உள்ளிட்டவை பற்றி நகராட்சி ஆணையாளரிடம் துணைத் தலைவர் கண்ணன் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே ஒருமையில் தன்னைப் பேசியதாக ஆணையாளர் பதில் கூற மறுத்த நிலையில், ஒருமையில் பேசியதை மற்ற கவுன்சிலர்கள் கண்டித்தனர். இதற்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகளைக் கண்டித்து அ.தி.மு.க.வின் கவுன்சிலர்கள் 13 பேர் வெளிநடப்பு செய்துள்ளனர்.