மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகித்து வந்த அன்புமணி ராமதாஸ், மு. சண்முகம், என். சந்திரசேகரன், எம். முகமது அப்துல்லா, பி. வில்சன் மற்றும் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் கடந்த 24ஆம் தேதியுடன் முடிவடைந்தது. முன்னதாக இந்த காலி பதவியிடங்களுக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து திமுக சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் மற்றும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதேபோல் அதிமுக கூட்டணியில் இன்பதுரை, தனபால் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். இதனையடுத்து இந்த 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்படி, திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பி. வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த 25ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர்கள் 4 பேரும் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்
இந்நிலையில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்பதுரை மற்றும் தனபால் ஆகிய இருவரும் இன்று (28-07-25) நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் ‘கடவுளின் பெயரால்’ எனக் கூறி தமிழில் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஏற்கெனவே அதிமுக சார்பில் தம்பிதுரை, சி.வி.சண்முகம், தர்மர் ஆகிய 3 பேரும் மாநிலங்களவை உறுப்பினர்காக உள்ள நிலையில், தற்போது 2 பேர் புதிதாக எம்.பிக்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் மாநிலங்களவையில் அதிமுக சார்பில் மொத்தம் 5 எம்.பிக்கள் உள்ளனர்.