அதிமுக எம்.எல்.ஏவும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன், இன்று (04-11-25) சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ள மனோஜ் பாண்டியன் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் ஆவார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “திமுகவில் இணைந்ததற்கு காரணம், இன்று திராவிட கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கின்ற ஒரு தலைவராகவும், தமிழர்களுக்கு போராடுகின்ற ஒரு தலைவராகவும், தமிழர்களின் உரிமையை எங்கும் அடகு வைக்காத ஒரு தலைவராகவும் முதல்வர் இருக்கிறார். அதனால் சிந்தித்து ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளேன். எஞ்சிய வாழ்க்கையில் திராவிட கொள்கைகளை பாதுகாக்கக்கூடிய இயக்கமாகவும், அதை தலைமையேற்றுக்கூடிய தலைவருடைய சிந்தனைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு தொண்டனாக என்னை இணைத்து பணியாற்ற வந்துள்ளேன்.
இன்று மாலை 4 மணிக்கு என்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன். அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆரும், அதை பாதுகாத்த ஜெயலலிதாவும் எந்த சூழ்நிலையிலும் எந்த இயக்கத்துக்கும் அடகு வைக்கவில்லை. அதிமுக என்பது அவர்களது காலத்து அதிமுக இல்லை. இன்றைய அதிமுக, வேறொரு இயக்கத்தை நம்பி அந்த இயக்கத்தின் சொல்படி தான் நடக்கக்கூடிய ஒரு துர்பாக்கியமான இருக்கின்றது. எந்த கொள்கைக்காக அந்த இயக்கம் உருவாக்கப்பட்டதோ அதை காற்றில் பறக்கவிட்டு, பா.ஜ.கவின் கிளை கழகமாக செயல்படுகிற சூழ்நிலை உள்ளது. திராவிட கொள்கைகளை பறைசாற்றி பாதுகாக்ககூடிய இயக்கமாக திமுக இருப்பதால் இங்கு இணைந்திருக்கிறேன்.
என்னை பொருத்தவரையில் சில நெருடல்கள் உண்டு தான். இருப்பினும் நான் எடுத்த முடிவில் உறுதியாக உள்ளேன். இயக்கத்துக்காக உழைத்தவர்களின் உழைப்பை அங்கீகரிக்காமல் அந்த உழைப்பு வேண்டாம் என்று விரட்டக்கூடிய எடப்பாடி பழனிசாமியின் நோக்கம் என்ன? அவரது நடைமுறை என்ன?. அவரது சிந்தனை என்ன?. தொண்டர்களின் உணர்வையும் மக்களுடைய உணர்வையும் எந்த சூழ்நிலையிலும் கேட்க மாட்டேன் என்று சொல்லி அதிமுகவை கூவத்தூர் பாணியில் கபளீகரம் செய்பவர்களோடு எப்படி இருப்பது என்று சிந்தித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு எந்த அடிப்படையில் கூட்டணி வைத்தார் என்பது இன்று வரையிலும் பதில் இல்லை. பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்த போது தொண்டர்களின் கருத்து கேட்கப்பட்டதா? பொதுக்குழு கூட்டப்பட்டதா?. இதெற்கல்லாம் விடை இல்லை. தன்னையும் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அதிமுகவை அடகு வைத்துவிட்டார்” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/04/manoj-2025-11-04-11-33-57.jpg)