AIADMK members walk out Erode Corporation presents financial report for the year 2026-27
ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் அர்பின் ஜெயின், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டம் தொடங்கியதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவையொட்டி சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, நாகரத்தினம் சுப்பிரமணியம் 2026 -27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் 2026-27-ம் ஆண்டில் மொத்த வருவாய் ரூ.519 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த வருவாய் செலவு ரூ.514 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உபரி ரூ.494 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களது பிரச்சினைகள் குறித்து பேசி தொடங்கினர். மாநகராட்சியில் டெண்டர் விடும்போது அது குறித்த தகவல் மாநகராட்சி கவுன்சிலருக்கு தெரிவிப்பதில்லை என தி.மு.க கவுன்சிலர்களும், அ.தி.மு.க கவுன்சிலர்களும் குற்றம் சாட்டினர். ‘10 கோடி டெண்டர் விவகாரத்தில் நோட்டீஸ் ஒட்டவில்லை. நீங்கள் யார் யாருக்கு விளம்பரம் கொடுத்துள்ளீர்கள் என்று எங்களுக்கு எப்படி தெரியும்’ என்று கவுன்சிலர்கள் ஆவேசமாக பேசினர்.
மண்டலத் தலைவர் பி.கே பழனிசாமி பேசும்போது, ‘டெண்டர் விஷயத்தில் வெளிப்படை தன்மை இல்லை. முதலில் கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் வழங்குங்கள், அதன் பிறகு பேப்பரில் விளம்பரம் கொடுங்கள்’ என்ற ஆவேசமாக பேசினார். அதைப்போல் மாநகராட்சி அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்களுக்கு மரியாதை வழங்குவதில்லை என்றும் கூறினார். பேப்பரில் விளம்பரம் வருவது கூட எங்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டாலும் முறையான பதில் இல்லை என்றார். காங் உறுப்பினர் சபுராமா சாதிக், ‘எனது வார்டில் கல்வெட்டு பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தும் அதற்கான பணி தொடங்கவில்லை. மேலும் குறுக்கு சாலைகளிலும் கோண வாய்க்கால் பகுதியிலும் தெரு மின் விளக்கு செய்து தரப்படவில்லை. அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படாததால் வருகிற தேர்தலின் போது வாக்கு கேட்க சென்றால் பொது மக்கள் கேள்வி கேட்பார்கள். எனவே விரைவில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு செய்யவும்’ என்றார்.
அதிமுக கவுன்சிலர்கள் ஜெகதீஷ், தங்கவேல், தங்கமுத்து பேசும்போது, ‘தீர்மானம் எண். 3 கால்நடை சந்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே நடக்கும் சந்தையில் எந்த பிரச்சனையும் இல்லை. தீர்மானம் 3 ஐ ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே சொத்து வரி மற்ற மாநகராட்சிகளை விட அதிகம் என்பதல்ல நாம் அனைவரும் வரியை குறைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் இந்த அரசு அதை குறைக்கவில்லை இதனை கடுமையாக கண்டிக்கிறோம். தீர்மானம் 38 என்பது எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சொத்து வரி அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளோம். ஆனால் நீங்கள் சதுரடிக்கு 50-லிருந்து சதுரடிக்கு 88 விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். அம்மா உணவகங்கள் பராமரிப்பு இன்றியும் சாப்பாடு கொடுக்கும் நபர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளீர்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம் . ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் நான்கரை ஆண்டுகளாகியும் மாநகராட்சியின் எல்லைப் பகுதிக்கு குடிநீர் செல்லவில்லை. பல லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட நகரும் குப்பை தொட்டிகள் எங்கு உள்ளது. பயன்படுத்தாமல் இருப்பது மாநகராட்சி நிர்வாகம் சரியில்லை என்பதை காட்டுகிறது. மாநகராட்சியின் பகுதியில் அமைந்துள்ள ஹைவேஸ் சாலையில் உள்ள சிறு கடைகள் மற்றும் வண்டியில் வசூல் செய்வது எவ்வளவு என்பதை தெரியப்படுத்தாமல் அதிக தொகை வசூல் செய்கிறார்கள் இதனை கண்டிக்கிறோம்’ என்று கூறி அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Follow Us