திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த சனிக்கிழமை 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் சிறுமியை தூக்கிச்சென்று அருகில் உள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அங்கிருந்து தப்பிய மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடைய பாட்டியிடம் தெரிவித்த நிலையில் சிறுமியை அவருடைய பாட்டி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
தொடர்ந்து சிறுமி சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சிறுமி நடந்து சென்ற பகுதிக்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது நபர் ஒருவர் சிறுமியை பின்தொடர்ந்து செல்வதும், திடீரென யாரும் இல்லாத நேரத்தில் அவர் அங்கிருந்து சிறுமியை தூக்கிச் சென்றது தொடர்பான பகீர் காட்சி வெளியாகி இருந்தது. இந்த காட்சியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து எட்டு நாட்கள் ஆகியும் பாலியல் கொடூரத்தை நிகழ்த்திய நபரை போலீசார் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபடப்பட நபரின் புகைப்படம் இதுவரை தெளிவில்லாமல் இருந்த நிலையில் ஓரளவிற்கு தெளிவான புகைப்படத்தை தற்பொழுது காவல்துறையில் வெளியிட்டுள்ளனர். சிகிச்சையில் இருக்கும் மாணவி இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபரை இப்போதுவரை போலீசார் பிடிக்காததைக் கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை நோக்கி அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் பேரணியாக நடந்து சென்றனர். அப்பொழுது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சாலையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-கொல்கத்தா சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.