‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார்.
இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டத்துக்கு நெறிமுறைகளை வகுப்பதற்காக தற்காலிகமாக அரசியல் கட்சிகளின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரைச் சந்தித்துப் பேசியதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், விஜய்யின் தவெகவில் இணைந்து கொண்டார். அதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், கரூர் துயரச் சம்பத்திற்கு பிறகு செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிச்செட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று (30-11-25) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மக்கள் முன்னிலையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதிமுக தொண்டர் ஒருவர் பலியாகியுள்ளார். ஈரோடு மாவட்டம் கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான அர்ஜூனன் என்பவர், கோபிச்செட்டிப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்துள்ளார். பிரச்சாரக் கூட்டத்துக்கு இடையே நின்று கொண்டிருந்த போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/30/admkstam-2025-11-30-20-17-49.jpg)