தமிழக அரசியலில் எதிரும் புதிருமான கட்சி என்றால் அது திமுக – அதிமுக தான். திமுக எதிர்ப்பு என்கிற ஒற்றை லைனை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக அரசியல் செய்யும் ஒரு கட்சி அதிமுக மட்டுமே என்று பலராலும் விமர்சிக்கப்படுகிறது. திமுக எதிர்ப்பு என்பது மறைந்த ஜெயலலிதா காலத்தில் உச்சத்தில் இருந்தது. அடிமட்ட தொண்டனோ, நிர்வாகியோ என யாராக இருந்தாலும் திமுக கரைவேட்டிய கட்சியுடன் ஒரு போட்டோ எடுத்திருந்தால் கூட அவர்களை கட்சியை விட்டு நீக்கி திமுகவை விரோதியாக்கி வைத்திருந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. அதாவது, சில நல்லது கெட்டதுகளில் திமுக – அதிமுகவின் மேல்மட்ட நிர்வாகிகள் முதல் கீழ்மட்ட தொண்டர்கள் வரை கலந்துக்கொள்ளத் தொடங்கினர். அப்படி கலந்துக்கொண்டாலும் நிர்வாகிகள் வெளிப்பார்வைக்குப் பட்டும் படாமல் தங்களை காட்டிக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் ஒரு புகைப்படம் திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் காட்பாடி ஏ.எஸ். ராஜாவின் மகன் திருமணம் செப்டம்பர் 11-ம் தேதி வேலூரில் நடைபெற்றது. இந்தத் திருமண அழைப்பிதழில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட செயலாளர்களின் பெயர்கள் போட்டுயிருந்தனர். திருமணத்துக்கு திமுக பொதுச்செயலாளரும், காட்பாடி தொகுதி எம்.எல்.ஏவுமான அமைச்சர் துரைமுருகன் கலந்துக்கொண்டிருந்தார். இதே திருமணத்தில் திருவண்ணாமலை தெற்கு மா.செவும், முன்னாள் அமைச்சருமான அக்ரி. கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏவும் கலந்துக்கொண்டார்.
இது குறித்து பேசிய சில அதிமுகவினர், அமைச்சர் துரைமுருகன் கலந்துக்கொண்டதைத் தவறு எனச் சொல்லவில்லை. “தொகுதிக்காரர் அவர், அழைத்திருப்பார், கலந்துக்கொண்டார். ஆனால், அவருடன் ஒரே சோபாவில் அமர்ந்து திருமணத்தில் கலந்துக்கொண்டுள்ளார் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி. இது எப்படி சரியாகும்? அம்மா இறந்தபின் கட்சி தறிக்கெட்டு போய்க்கொண்டு இருக்கிறது. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். மீது ஒரு நிர்வாகிக்கும் பயம் கிடையாது. அதனால்தான் இப்படி நடந்துக்கொள்கிறார்கள்” என புலம்பினார்கள். அதே சமயம், “எடப்பாடி பழனிசாமியே திமுகவின் முக்கிய அமைச்சர்களுடன் நேரடியாக அண்டர்கிரவுண்ட் டீலிங்கில் இருப்பவர்தான், போவியா” என்கிறார்கள் விவரம் அறிந்த மேல்மட்ட அதிமுக நிர்வாகிகள்.