AIADMK files case Action against Minister K.N. Nehru
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு பொறுப்பு வகித்து வருகிறார். இந்த துறையின் கீழ் டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி அனுப்பியது.
அதாவது இந்த துறையில் டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று முன்பே முடிவு செய்யப்பட்டு ஒவ்வொரு டெண்டர்களுக்கும் 7.5% முதல் 10% வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும், இந்த ஊழல் ரூ.1,020 கோடி வரை நடந்திருக்கலாம் எனவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. ஆனால், இதன் மீது திமுக அரசும் காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆகவே அமலாக்கத்துறை அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கடந்த டிசம்பர் மாதம் அதிமுக எம்.பி இன்பதுரை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். ஆனால் இதையடுத்தும் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேரு மீது தான் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என இன்பதுரை எம்.பி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
Follow Us