முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகருக்கு வருகை புரிய உள்ளதால் அதிமுக நிர்வாகிகளோடு வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து மா.செவும் முன்னாள் அமைச்சரும், போளுர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆலோசனை நடத்துவதற்காகவும், வரவேற்பு பதாகைகள் மற்றும் கொடிக் கம்பம் நடுவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக செங்கம் வந்து விட்டு கிருஷ்ணகிரி டூ திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வையிட்டபடி அவரது கார் வந்துள்ளது. அப்போது திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி இருசக்கர வாகனத்தில் பார்சல் எடுத்து வந்த ஏழுமலை என்பவர் மீது அக்ரி கிருஷ்ணமூர்த்தி வந்த கார் மோதியதில் வீரளுர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலைக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்தை ஏற்படுத்திவிட்டு காயம்பட்டவர் என்னவானார் என பார்க்காமல் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கார் அங்கிருந்து வேகமாக சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. பின்னால் வந்த அதிமுக நிர்வாகிகள் பலத்த காயமடைந்த ஏழுமலையை மீட்டு, சம்பவத்தை மூடி மறைப்பதற்காக காயமடைந்த இளைஞரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்காமல் செங்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறி திருவண்ணாமலைக்கு அழைத்து வந்துள்ளனர். வரும்போதே அந்த இளைஞர் மற்றும் அவரது உறவினர்களிடம் புகார் தராதிங்க, பணம் தருமாறு என பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவி செய்யாமல் பின்னால் வந்த தனது ஆதரவாளர்களிடம் போன் மூலம் அவரை மருத்துவமனையில் சேருங்க, புகார் கொடுக்காம பார்த்துக்குங்க, விஷயம் வெளியே தெரியாம பார்த்துக்குங்க எனச்சொன்னதாகக் கூறப்படுகிறது. அதன்படியே அதிமுகவினர் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
விபத்து நடப்பது என்பது சாதாரணம். காயம்பட்டவருக்கு உதவி செய்யாமல் ஒரு முன்னாள் அமைச்சர், சிட்டிங் எம்.எல்.ஏ ஓடி ஒளிகிறார் என்றால் தவறு அவர் பக்கம் உள்ளது என்றே பொருள். அதோடு காரின் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும், வாகன ஓட்டுநர் போதையில் இருந்தாரா? வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருந்தாரா? வாகனத்துக்கான காப்பீடு உள்ளதா என விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.