திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 15, 16, 18 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் ஒவ்வொரு தொகுதி அளவிலும் அதிமுக சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisment

திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளர் ஜெயசுதா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் ஆரணி தொகுதி எம்எல்ஏவுமான சேவூர் ராமச்சந்திரன், பாசறை மாவட்டச் செயலாளர் கஜேந்திரன், பேரவை மாவட்டச் செயலாளர் பாரி பாபு, மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், அணிச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Untitled-1

எடப்பாடி பழனிசாமியின் வருகைக்காக கட்அவுட்கள் வைக்கவேண்டும், ஆட்களை அழைத்து வர செலவு செய்ய வேண்டும், அதற்காக ஒவ்வொருவரும் நிதி அளிக்க வேண்டும் என்று ஜெயசுதா கூறியுள்ளார். அதன்படி, முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் 25 லட்சம் ரூபாய் அளிப்பதாக உறுதியளித்துள்ளார். மாவட்டச் செயலாளராக (மா.செ.) 15 லட்சம் ரூபாய் அளிப்பதாகக் கூறிய ஜெயசுதா, மற்றவர்களும் அதற்கேற்ப நிதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், அவர் ஒரு பட்டியல் தயாரித்து, ஒவ்வொருவரிடமும் நிதி கோரியுள்ளார்

Advertisment

ஒவ்வொரு அணிச் செயலாளரும் 5 லட்சம் ரூபாயும், ஒன்றியச் செயலாளர்கள் 3 லட்சம் ரூபாயும், ஆரணி நகரம் மற்றும் கண்ணமங்கலம் பேரூராட்சிகளில் உள்ள கவுன்சிலர்கள் 50,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், அதிமுக நிர்வாகிகளாகவும், நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களாகவும் உள்ள கட்சி நிர்வாகிகள், அவர்களின் தகுதிக்கேற்ப 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை அளிக்க வேண்டும் என்று பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொருவரிடமும் பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இது அதிமுக நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “நிதி கேட்டால் பரவாயில்லை, ஆனால் தானாகவே தொகையை நிர்ணயித்து, பட்டியல் தயாரித்து பணம் கேட்பது என்ன அர்த்தம்?” என்று கேள்வி எழுப்புகின்றனர். ஆரணி தொகுதியில் மட்டும் சுமார் 1 கோடி ரூபாய் இலக்காக வைத்து நிதி வசூல் நடைபெறுகிறது. இது ஆரணி தொகுதிக்கு மட்டுமல்ல, மத்திய மாவட்டச் செயலாளரின் கீழ் உள்ள ஆரணி மற்றும் போளூர் ஆகிய இரு தொகுதிகளிலும் இதேபோல் நிதி வசூல் வேட்டை நடைபெறத் தொடங்கியுள்ளது.

4

அதிமுக தலைமை நிலையச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வேலுமணி, சட்டமன்றத் துணைக் கொறடா உதயகுமார் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்து, எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யும் இடங்களை ஆய்வு செய்து, நிர்வாகிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்து வருகின்றனர்.

தலைமைக் கழகம் சார்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நான்கு மாவட்டச் செயலாளர்களுக்கு பல கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டு, வரவேற்பு நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்துமாறு கூறப்பட்டதாகத் தெரிகிறது. கட்சி தலைமையே நிதி அளித்து ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லும் நிலையில், உள்ளூர் நிர்வாகிகளிடம் வசூல் நடத்துவது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர்.