“என்னால முடியல... நான் போனதுக்கு அப்புறம் என் குடும்பத்த துன்பப்படுத்தாதீங்கப்பா...” என அதிமுக ஐடிவிங் நிர்வாகி ஆடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சமபவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பெல்லம்பட்டி செங்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான செல்வானந்தம். மனைவி முத்து பிரியாவுடனும் மகனுடனும் வசித்து வந்தார். அதிமுகவின் குண்டடம் மேற்கு தகவல் தொழில்நுட்ப ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த செல்வானந்தம், கடந்த ஆறு ஆண்டுகளாக மக்காச்சோளம் வாங்கி விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று சங்கிலிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் செல்வானந்தம் விஷ மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற உறவினர்கள், செல்வானந்தத்தை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செல்வானந்தம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையே, செல்வானந்தத்தின் செல்போனை ஆய்வு செய்த மனைவி முத்து பிரியா, அதில் இருந்த ஆடியோவைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். செல்வானந்தம், விஷ மாத்திரைகளை உட்கொள்ளும் முன், தனது ஐபோனில் இருந்து மற்றொரு தொலைபேசிக்கு ஒரு ஆடியோவைப் பேசி அனுப்பியிருந்தார். அந்த ஆடியோவில், “மதுரை மண்டல திமுக பொறுப்பாளர் பி.டி. மணிமாறன் மற்றும் மதுரை தெற்கு மீனவர் அணி அமைப்பாளர் முத்துக்குமார் இருவரும் சேர்ந்து, மக்காச்சோள வியாபாரத்தில் என்னை ஏமாற்றிவிட்டனர். மேலும், பணம் தரவேண்டும் என்று காவல்துறையினர் மூலம் அழுத்தம் கொடுத்து எழுதி வாங்கிக் கொண்டனர். இதுவரை 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ள நிலையில், தொடர் மிரட்டல்கள் விடுத்தும், அவ்வப்போது என்னை அவமானப்படுத்தியும், பணம் கேட்டு மிரட்டினர்.
அதேபோல், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரும், அனுப்பப்படாத மக்காச்சோளங்களுக்கு போலியாக பில் தயாரித்து, 40 லட்சம் ரூபாய் மற்றும் 45 லட்சம் ரூபாய் என இரண்டு காசோலைகளைப் பெற்றுக்கொண்டு, தனது மனைவி பெயரில் உள்ள ஓம் முருகா ஆயில் மில் மீது மோசடி வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டி வந்தார். தொழிலில் பலர் என்னை ஏமாற்றிவிட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்போது உயிரை மாய்க்கும் நிலைக்கு வந்துவிட்டேன்” என்று கூறியிருந்தார்.
மற்றோரு ஆடியோவில், “நா போனதுக்கு அப்புறம் என்னோட குடும்பத்தை யாரும் துன்பப்படுத்தாதீங்கப்பா....நான் போனதே போதும், தயவு செஞ்சி யாரும் யாரையும் ஏமாத்தாதீங்கப்பா.... என்னால முடியல...” என்று கண்ணீரோடு செல்வானந்தம் பேசியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, ஆடியோ ஆதாரங்களுடன் குண்டடம் காவல் நிலையம் சென்ற முத்து பிரியா, கணவர் செல்வானந்தத்தை தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.