கோவை மாவட்டம் பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட தாளியூர் கிராமத்தில் வசித்து வந்தவர் 46 வயதான மகேஸ்வரி. இவருடைய கணவர் அதிமுகவைச் சேர்ந்த கவி சரவணன். 51 வயதான இவர், பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் தலைவராகவும், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இதனிடையே, கவி சரவணனுக்கு பல பெண்களுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதையறிந்த மகேஸ்வரி தனது கணவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். ஒருகட்டத்தில், கவி சரவணன் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகேஸ்வரியை விட்டுப் பிரிந்து வடவள்ளி பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில், கவி சரவணனிடம் கடந்த பல ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வந்த சுரேஷ் என்பவர், கடந்த மாதம் 28-ம் தேதியன்று தாளியூரில் உள்ள மகேஸ்வரி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, தனது கணவரின் தொடர்பு குறித்து பேசிய மகேஸ்வரி, இதற்கெல்லாம் நீதான் காரணம் எனக்கூறி டிரைவர் சுரேஷைத் திட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகேஸ்வரியை கொடூரமாகக் குத்திக் கொலை செய்தார். அதன்பிறகு, அதிமுக பிரமுகர் கவி சரவணனிடம் சென்று, மகேஸ்வரி தன்னைத் திட்டியதால் ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாகக் கூறவே, அவர் ஓட்டுநர் சுரேஷைத் தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

Advertisment

இதனையடுத்து, சுரேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்த போலீசார், இவ்வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், டிரைவர் சுரேஷ் 15 ஆண்டுகளுக்கு மேலாக கவி சரவணனிடம் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளதுடன், அவர்கள் வீட்டில் இருக்கும் அனைத்துப் பணிகளையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில், டிரைவர் சுரேஷ் மகேஸ்வரியை கொலை செய்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சுரேஷை போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் திடீர் திருப்பமாக, அதிமுக பிரமுகர் கவி சரவணன் ஓட்டுநர் சுரேஷை வைத்து தனது மனைவியை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சுரேஷ் அளித்த வாக்குமூலத்தில், ‘அக்டோபர் 19-ம் தேதி மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் நானும் கவி சரவணனும் கலந்துகொண்டோம். அப்போது, அவர் மகேஸ்வரியால் தொந்தரவு அதிகமாக உள்ளது. எனக்கு விவாகரத்து தர மறுக்கிறாள். அவளை நீ கொலை செய்துவிடு. வழக்கு, ஜாமின் உள்ளிட்டவைகளை நான் பார்த்துக்கொள்கிறேன். திண்டுக்கல், வேடசந்தூர், செங்கல்சூளையை நீ பார்த்துக்கொள். உனக்கு வேண்டிய வசதிகளை நான் செய்து தருகிறேன் என மகேஸ்வரியை கொலை செய்யத் தூண்டினார்’ எனக் கூறியுள்ளார். இதையடுத்து, கவி சரவணனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisment