கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டக்குடி வட்டம் சார்பில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டமும், கட்சி அலுவலகத் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு வட்டச் செயலாளர் வி. அன்பழகன் தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர் ஆர். ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் பி. முத்துலட்சுமி, பேரூராட்சிக் கவுன்சிலர் ஆர். விஸ்வநாதன், வட்டக் குழு உறுப்பினர் என். பரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராகக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு, பெண்ணாடம் நகரம், எல்லையம்மன் கோவில் தெருவில் புதிதாக ரூ. 4 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்சியின் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், பெண்ணாடத்தில் புதிய கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு, பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்திய கட்சியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். நாட்டையே கபளீகரம் செய்து வரும் பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதற்கு மும்முரமாகச் செயல்படுவது சி.பி.எம். தான். வருகின்ற தேர்தலில் எத்தனை பேருக்கு தேர்தல் அங்கீகாரம் பா.ஜ.க. வழங்கும் என்பது கேள்விதான். பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களைத் தேர்தல் ஆணையம் நீக்கியது. அது குறித்து சரியான பதில் இல்லை. இதில், இந்தியா கூட்டணியின் வலுவான எதிர்ப்பால், தற்போது 3 லட்சம் வாக்காளர்களை மட்டும் நீக்கியுள்ளதாகக் கூறுகிறார்கள். இதனால், 62 லட்சம் வாக்காளர்களின் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. 75 ஆண்டுகாலம் பெற்ற ஒரே வாக்குரிமையைத் தட்டிப்பறிக்கும் வேலையில், தேர்தல் சீர்திருத்தம் எனப் பா.ஜ.க. செய்து வருகிறது.
தமிழகத்தில், அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். உள்ளாட்சித் துறையில் செயல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள் நிரந்தரப் பணியாளர்களாகவும், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் ஒப்பந்தப் பணியாளர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களை நிரந்தரப்படுத்துவதால் என்ன பெரிய இழப்பு வந்துவிடப் போகிறது? அவர்களின் மகத்தான போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்து குரல் கொடுக்கிற இயக்கம் செங்கொடி இயக்கம்.
நாட்டில், உழைப்பாளி மக்களிடம் பணம் இருந்தால் மட்டுமே அதிகப் பொருள்கள் வாங்குவார்கள். தொழில் வளர்ச்சி பெருகும், வாங்கும் சக்தி அதிகரிக்கும். ஆனால், மோடி அரசு இந்தியப் பொருளாதாரத்தை அழித்து ஒழிக்கும் வேலையைச் செய்து வருகிறது. அதிமு.க., பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் விலகி இருந்தவர்கள், தற்போது சட்டமன்றத் தேர்தலுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். அதிமு.க., பா.ஜ.க. கூட்டணி தமிழகத்தில் படுதோல்வியைச் சந்திக்கும்.
விஜய் கொள்கைகளைக் கூறி ஆட்சிக்கு வரட்டும், யாரும் தடை கூறவில்லை. கரூரில் அவரைப் பார்க்க வந்த அவரது கட்சியினர், கண்ணுக்கு முன் பிணமாகி மடிந்தனர். இதைப் பார்த்துவிட்டு, அந்த இடத்தில் இருந்து 2 நிமிடத்தில் கிளம்பி, அரை மணி நேரத்தில் சென்னைக்குச் சென்றுவிட்டார்.அவருக்கு அரசியல் கடமை, அரசியல் முதிர்ச்சி, அரசியல் பதற்றம் இல்லாமல், அவருக்காகக் கூடிய மக்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்களைப் பாதுகாக்காமல் ஓடியது என்ன பண்பாடு என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில், காதல் செய்தாலே சமூக விரோதச் செயலாகக் கருதி, சாதி ஒடுக்குமுறையால், பெற்ற பிள்ளைகளைத் தந்தை, தாய், உறவினர்களே கொலை செய்யும் மூர்க்கத்தனமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதே விருதாச்சலத்தில், கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணகி முருகேசனைக் கொலை செய்தனர். அதற்கு, சி.பி.எம். 23 ஆண்டுகள் தொடர்ந்து போராடி, நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளது. அவர்களை வாழவிட்டிருந்தால், இன்று சிறந்த பொறியாளர்களாக வாழ்ந்திருப்பார்கள். மனிதனைப் பிடித்திருக்கும் மிருகமான சாதியை ஒழிக்க வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பித்தபோது, சாதி மோதலுக்கு வழிவகுக்கும் என நாங்கள் கூறினோம். அதுதான் நடந்தது. தந்தையும் மகனும் சேர்த்த பணத்தைப் பிரித்துக்கொள்வதில் உடன்பாடு இல்லை. அதனால், தந்தைக்கும் மகனுக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்த ராமதாஸ், அவரது மகன் அன்புமணியைச் சந்திக்க முடியாது எனக் கூறிவிட்டார். சாதியால் எதையும் சாதிக்க முடியாது. சொத்து என்றால், சாதி, மதம் என்று ஒன்றும் இருக்காது.பா.ம.க. மாநாடுகள் நடத்தி, எத்தனை பட்டியல் சமூக மக்களுக்கு, மிகவும் பிற்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளார்கள்? இன்னும் அவர்கள் குடிசை வீடுகளில் தானே வாழ்ந்து வருகிறார்கள்? சாதி ஏற்றத்தாழ்வுகளைக் களைய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனை எதிர்க்கும் என்று அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து, கட்சி மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ். வாலண்டினா, எஸ். ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. கருப்பையன், ஜி. ஆர். ரவிச்சந்திரன், எஸ். பிரகாஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி. ஜெயராமன், கம்மாபுரம் ஒன்றியச் செயலாளர் கலைச்செல்வம், நெய்வேலி நகரச் செயலாளர் பாலமுருகன், விருதாச்சலம் ஒன்றியச் செயலாளர் கே. எம். குமரகுரு, வடலூர் நகரச் செயலாளர் இளங்கோவன், திருமுட்டம் வட்டச் செயலாளர் தினேஷ்பாபு உள்ளிட்ட திட்டக்குடி வட்டக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சியினர், பொதுமக்கள் எனத் திரளாகக் கலந்துகொண்டனர்.
பெண்ணாடம் நகரச் செயலாளர் பி. அரவிந்தன் நன்றி கூறினார். பொதுக்கூட்டத்தில், கே. பாலகிருஷ்ணனிடம் பெண்ணாடம், விருதாச்சலம், திட்டக்குடி, கம்மாபுரம் உள்ளிட்ட கிளைகள் சார்பில் கட்சி நிதி வழங்கப்பட்டது.