தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதில், திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலுவாக இடம் பெற்றுள்ளன.

மறுபுறம், பிரிந்து கிடந்த அதிமுக - பா.ஜ.க கூட்டணி 2026ஆம் தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மீண்டும் சேர்ந்திருக்கிறது. இந்த கூட்டணி அறிவித்ததில் இருந்து கூட்டணி ஆட்சியா? இல்லையா? என்பது தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.  அதே சமயம் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் பேசியிருந்தார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமல், முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவில் இருந்துதான் ஒருவர், வருவார் என்றார். இது அதிமுகவினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வரும் டி.டி.வி. தினகரன், “தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி என்றாலே அது கூட்டணி அமைச்சரவைதான். முதலமைச்சர் யாரென்று கூட்டணி சேர்ந்து முடிவு செய்யும்” என்று தெரிவித்து, அதிமுகவினருக்கு மேலும் அதிர்ச்சி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “சென்னைக்கு அமித்ஷா வந்த போது தெளிவாக பேசியுள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும், மேலும் அதிமுக ஆட்சி அமைக்கும் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்று அவர் தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அவர் தெளிவாகக் கூறிவிட்டார். இதில் "டெல்லி எடுக்கும் முடிவுதான். உங்களுக்கெல்லாம் தெரியும். மத்திய உள்துறை அமைச்சர் கூறிய பிறகு, அதற்கு அடுத்தபடியாக யார் பேசினாலும் அது சரியாக இருக்காது என்பதுதான் என்னுடைய கருத்து” என்றார்.

Advertisment

இப்படி கூட்டணி ஆட்சி குறித்தும், முதல்வர் வேட்பாளர் குறித்தும் பல்வேறு சலசலப்புகள் இருந்து வரும் நிலையில், தற்போது அதிமுக அமைப்பு செயலாலர் அன்வர் ராஜா தெரிவித்துள்ள கருத்து கூட்டணிக்குள்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அன்வர் ராஜாவிடம், திராவிட மண்ணில் பாஜக காலூன்ற துடிப்பதை எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு, “தமிழ்நாட்டில் காலுன்ற துடிப்பது பாஜகவின் எண்ணம். அது ஒருக்காலும் நடக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து” என்று தெரிவித்திருக்கிறார்.