Agriculture Minister inaugurated development projects in Pichavaram area
தமிழக முதல்வர் மழை நீரினை சேகரித்திடவும், நீர் ஆதாரத்தினை பெருக்கி நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்திடவும், வெள்ள பாதிப்பிலிருந்து விளை நிலங்களை பாதுகாக்கவும் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் ஆற்றின் கரைப்பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு கரைகளை பலப்படுத்துதல், தடுப்புச்சுவர் அமைத்தல் ஆகிய பணிகளும் மற்றும் நிலத்தடி நீரினை செறிவூட்டும் வகையிலும் ஒழுங்கியம் அமைக்கும் பணிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சிதம்பரம், தில்லையம்மன் ஓடையில் வெளிவட்ட சாலையில் ரூ.7.50 கோடியில் வெள்ள தடுப்புச்சுவர் அமைக்கும் பணிக்கும், கீரப்பாளையம், வடக்கு பூதங்குடி வாய்க்காலில் ரூ.3.55 கோடியில் உபரிநீர் வெளியேற்றும் மதகு கட்டுமானப் பணிக்கும், புவனகிரி வட்டத்திற்குட்பட்ட சேத்தியாத்தோப்பு வெள்ளார் ராஜன் வாய்க்கால் குறுக்கே ரூ.7.40 கோடி மதிப்பீட்டில் ஒழங்கியம் அமைக்கும் பணிக்கும், காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்குட்பட்ட முட்டம் வாய்க்கால், மணவாய்க்கால் மற்றும் செங்கழுநீர்பள்ளம் வாய்கால்களில் வெள்ள பாதுகாப்புச் சுவர் ரூ.8.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணிக்கும், தொரப்பு கிராமம், வடவாற்றின் குறுக்கே ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் புதிய ஒழுங்கியம் அமைக்கும் பணிக்கும், கஸ்பா வாய்க்காலின் குறுக்கே ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் நடைபாதை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் எடுத்து வைத்து பணியை தொடங்கி வைத்தார். மேலும் சிதம்பரம், பிச்சாவரம் உப்பனாறு வடிகாலில் ஒழுங்கியம் சேதமடைந்துள்ளதால் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மறுகட்டுமானப் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதுகுறித்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “ஒழுங்கியம் மறுகட்டுமானம் செய்யப்படுவதன் மூலம், தெற்கு பிச்சாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு கூத்தன்கோயில், சாலியன்தோப்பு, இளநாங்கூர், உசுப்பூர், அண்ணாமலைநகர், கனகரப்பட்டு, ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் வடிகால் வசதியும் பெறுகிறது. மேலும், 6 கிராம பகுதிகளில் உள்ள சுமார் 16 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உப்பு நீரால் பாதிக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யாசெந்தில்குமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர் ரமேஷ், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Follow Us