வட இந்தியாவில் உள்ள திருமணமான பெண்கள், தங்களது கணவரின் பாதுகாப்பிற்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் சூரிய உதயம் முதல் இரவு வரை விரதம் இருந்து கொண்டாடும் பண்டிகை தான் கர்வா செளத். இந்த பண்டிகையின் போது, பெண்கள் முழு நாளும் விரதம் இருந்து இரவில் ஒரு தட்டில் விளக்கு, குங்குமம் ஆகியவற்றை ஏந்தி சல்லடை மூலம் நிலவை பார்ப்பார்கள். கணவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஆழ்ந்த நம்பிக்கையோடு இந்த பண்டிகையை இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டு நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று இரவு முதல் கர்வா செளத் பண்டிகை வெகு விமர்சையாக இந்து பெண்களால் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகை அன்பு மற்றும் பக்தியின் கொண்டாட்டப்பட்டாலும், ஒரு வினோத புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. அதாவது ஆக்ராவில் ஒரு கணவரின் இரண்டு மனைவிகள் ஒன்றாகச் சேர்ந்த கர்வா செளத் விரதத்தை கடைபிடித்து ஒரே நேரத்தில் சடங்குகளைச் செய்து ஒரே நேரத்தில் முடித்திருத்திருக்கிறார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் மக்களிடையே ஆர்வத்தையும் விவாதத்தையும் தூண்டியுள்ளது.
ஆக்ராவின் எட்மத்தௌலா பகுதியைச் சேர்ந்தவர் ராம் பாபு நிஷாத். இவருக்கு ஷீலா தேவி மற்றும் மன்னு தேவி என இரண்டு மனைவிகள் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஷீலா தேவியை மணர்ந்த ராம் பாபு, சில காலம் கழித்து மன்னு தேவியை காதலித்தார். இந்த உறவு ஷீலா தேவிக்கு தெரிந்த பின்னும் அவர் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ராம் பாபு ஒரு கோயில் விழாவில் மன்னு தேவியை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தாண்டு கர்வா செளத் பண்டிகையை ஒன்றாக கொண்டாட ஷீலா தேவியும் மன்னு தேவியும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஒரு நாள் முழுவதும் ஒன்றாக விரதம் இருந்துள்ளனர். அதன் பின்னர், மாலை பூஜைக்காக இரு பெண்களும் ஒன்றாக அமர்ந்து, சந்திரனுக்கு பிரார்த்தனை செய்து இறுதியாக தங்கள் கணவரின் கைகளில் இருந்து தண்ணீர் குடித்து விரதத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். மூன்று பேரும் சேர்ந்து பண்டிகையை கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ஏற்பாடு குறித்து ராம் பாபு கூறுகையில் , “காதல் இருக்கும் இடத்தில், சண்டைக்கு இடமில்லை” என்றார்.