கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்.பி. விமலா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. அதன்படி ஐ.ஜி. அஸ்ரா அஸ்ரா கார்க் தலைமையிலான இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் எனப் பலர் இடம் பெற்றுள்ளனர்.
அந்த வகையில் இந்த குழுவினர் கடந்த சில நாட்களாகக் கரூர் பகுதியில் முகாமிட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொருபுறம், தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிற்குக் கூடுதல் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் வீட்டை பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர். அதோடு அவர்கள், “விஜய் வெளியே வரவேண்டும்; இறந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்; இந்த உயிரிழப்புகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்” என முழக்கமிட்டனர்.
அப்போது அவர்களைச் சுற்றிவளைத்த காவல்துறையினர் அங்கிருந்து திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நள்ளிரவு சுமார் 01:50 மணி அளவில் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து விஜய் வீட்டிற்கு அதிகாலை 04:30 மணிக்குச் சென்ற வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் புரளி எனத் தெரிய வந்தது. அதே சமயம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி தலைமை அலுவலகத்திற்குக் கடந்த 28ஆம் (28.09.2025) இரவு இ - மெயில் ஒன்று வந்தது. அதில் நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை, பா.ஜ.க தலைமை அலுவலகம், எடப்பாடி பழனிசாமி, நடிகை திரிஷா, நடிகர் எஸ்.வி. சேகர், நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் இல்லத்திற்கும், சென்னையில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இலங்கை தூதரகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.