புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, அறந்தாங்கி சப் டிவிசன்களில் சமீப காலமாக கோயில் உண்டியல் திருட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கண்காணிப்பு கேமரா உள்ள அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோவிலில் உண்டியலையே தூக்கிச்சென்ற திருடர்களை இன்று வரை பிடிக்க முடியவில்லை.
கீரமங்கலம் சரகத்தில் ஒரே இரவில் கீரமங்கலம் வேம்பங்குடி அடைகக்கலம் காத்த அய்யனார் கோவிலில் 2, நகரம் காளியம்மன் கோயிலில் 1, கொத்தமங்கலம் காமாட்சியம்மன் கோயிலில் 2 உண்டியல் என ஒரே நேரத்தில் 5 உண்டியல்கள் உடைத்து திருடப்பட்டிருந்தது. அடுத்த சில நாளில் கொத்தமங்கலத்தில் மகிழம்பாள் ஊரணி கரையில் உள்ள விநாயகர் கோவிலில் குடமுழுக்கு நடந்த அன்று இரவே உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இப்படி உண்டியல் திருட்டுகள் அதிகரித்துள்ளது. போலீசார் தேடியும் திருட்டுக் கும்பலை பிடிக்க முடியவில்லை. கொத்தமங்கலத்தில் உண்டியல் உடைக்கும் போது திருடனுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியிருந்தது
இந்நிலையில்தான் அதே கொத்தமங்கலத்தில் பிரசித்திப் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் முன்பு உள்ள விநாயகர் கோவிலில் இன்று திங்கட்கிழமை மதியம் ஒரு நபர் இரும்புக் கம்பியால் உண்டியல் பூட்டை உடைத்த அங்கே சாமி கும்பிட ஆள் வந்ததும் அதே இடத்தில் ஓய்வெடுப்பது போல படுத்துவிட்டார் அந்த நபர். ஆனால் உண்டியல் அருகே கம்பி கிடந்ததைப் பார்த்த சாமி கும்பிட வந்தவர் அந்தப் பகுதியில் நின்றவர்களிடம் கூற மக்கள் கூடிவிட உண்டியல் திருடனால் தப்பிச் செல்ல முடியவில்லை. அதே நேரத்தில் முத்துமாரியம்மன் கோவில் கருவறையில் ஒரு நபர் நிற்பதைப் பார்த்து அந்த நபரையும் பிடித்து வைத்துக் கொண்டனர்.திருடர்களை பிடித்து வைத்துக் கொண்டு கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்த கிராமத்தினர் திருடர்களிடம் விசாரித்த போது விநாயகர் கோவிலில் உண்டியல் பூட்டு உடைத்தவர் திருச்சுழியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் மணிகண்டன்(57) என்றும் தான் கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு கட்டிடப் பொறியாளரிடம் வேலை செய்யும் வெளியூர் கொத்தனார்களுக்கு சமையல் வேலை செய்வதாக கூறியுள்ளார்.
மேலும் சமையல் வேலை முடிந்ததும் அந்தப் பகுதியில் உள்ள கோயில்களில் ஓய்வெடுப்பது போல போய் படுத்துக் கொண்டு ஆள் இல்லாத நேரங்களில் உண்டியல் உடைத்து திருடுவதாகவும் கூறியுள்ளார். தற்போது அதே ஊரில் ஒரு வீட்டு வேலை நடப்பதாக கூறியுள்ளார். மேலும் நான் மட்டுமே வந்தேன். என் கூட யாரும் வரவில்லை என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில் கருவறையில் நின்ற நபர் நா.கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மெய்யநாதன் என்று கூறியவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசியுள்ளார்.
இருவரையும் கீரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் கிராமத்தினர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே கொத்தமங்கலம் பகுதியில் உண்டியல் உடைத்தது இந்த நபராக இருக்குமோ என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கொத்தனார்களுக்கு சமையல் செய்து கொடுப்பது போல் சமையல் செய்து கொடுத்த பிறகு இப்படி திருடச் செல்லும் மணிகண்டன் வேறு எங்கெல்லாம் திருடியுள்ளார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.