ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான சட்டங்களில் அதீத கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் படிக்கக்கூடாது, கட்டாயம் புர்கா அணிய வேண்டும், ஆண் துணையின்றி வெளியே செல்லக்கூடாது, திருமணமான எந்த பெண்ணுக்கும் விவகாரத்து கிடையாது, ஆண்கள் முகத்தில் தாடி வைத்துக்கொள்ள வேண்டும், உயிருடன் இருக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் புகைப்படங்களைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பக் கூடாது எனப் பல்வேறு பழமைவாதச் சட்டங்களையும் அமல்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஷரியா சட்டத்துடன் முரண்படுவதாகக் கூறி ஆப்கானிஸ்தான் பல்கலை. பாடங்களில் பெண்கள் எழுதிய புத்தகத்திற்குத் தாலிபான் தலைமையிலான அரசு தடைவிதித்துள்ளது. பெண் உரிமை, பாலின ஆய்வுகள் உள்ளிட்ட தலைப்புகளில் எழுதப்பட்ட பெண் எழுத்தாளர்களின் 140 புத்தகங்கள், ஈரானிய எழுத்தாளர்களின் 310 புத்தகங்கள் என மொத்தம் 679 புத்தகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.