தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை எனத் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சிகளான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையமும் எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட பணிகள் மூலம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சியின் சட்ட திட்ட விதிகள் 19 உட்பிரிவு 7 மற்றும் 25 உட்பிரிவு 2இன்படி, இன்று (10.12.2025) காலை 10 மணிக்குக் கூடுகிறது. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்க உள்ளார். அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்க உள்ளார். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம், கூட்டணி பேச்சுவார்த்தை, சட்டமன்ற தேர்தல் பணிகள், தேர்தல் கூட்டணி நிலைப்பாடு, திமுக அரசுக்கு எதிரான பரப்புரை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/10/admkeps-ds-meet-file-2025-12-10-07-54-40.jpg)
அதே சமயம் கட்சி ஒருங்கிணைப்பு குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது கவனிக்கத்தக்கது. முன்னதாக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் தனித் தனியே அக்கட்சியின் சார்பில் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி உறுப்பினர்கள் அழைப்பிதழுடன் வருகை தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Follow Us