தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், மத்திய அமைச்சரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று (23.12.2025) சென்னைக்கு வருகை தந்துள்ளார்
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியுடன், பியூஸ் கோயல் ஆலோசனை நடத்தினார். அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், எடப்பாடி பழனிச்சாமி பட்டியல் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த பட்டியலில் அதிமுக 170 இடங்கள், பாஜக 23 இடங்கள், பாமக 23 இடங்கள் மற்றவை (தேமுதிக 6 இடங்கள், அமமுக 6 இடங்கள், ஓ.பி.எஸ். 3 இடங்கள்) 18 இடங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் பாஜகவே பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளட்டும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதாவது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை இனைக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு பிளவுபட்டுள்ள பாமகவில் சமரசத்தை ஏற்படுத்த அதிமுக பொறுப்பேற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரின் சமரசத்திற்கும் அதிமுக பொறுப்பேற்பதாக எடப்பாடி பழனிசாமி இன்றைய கூட்டத்தில், பியூஸ் கோயலிடம் உறுதி அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us