அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த நிர்வாகியாக இருந்த கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று பிரிந்தவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது கோரிக்கையை பழனிசாமி ஏற்றால், அவரது பரப்புரையில் பங்கேற்பேன். 10 நாட்களுக்குள் கட்சியில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில், ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இறங்கத் தயாராக இருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், கட்சியின் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி, எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இத்தகைய சூழலில் தான் ஹரித்துவார் ஆன்மீக பயணம் செல்வதாகச் சொல்லிவிட்டு டெல்லி கிளம்பிய செங்கோட்டையன் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசியிருந்தார். மற்றொரு புறம் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று (12.09.2025) பரப்புரை மேற்கொண்டார்.
இந்நிலையில் பரப்புரை பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் முழக்கம் எழுப்பினர். அதாவது அதிமுகவை ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது அதிமுகவை ஒன்றிணைத்தால் மட்டுமே கட்சிக்கு வாழ்வு என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், அக்கட்சியின் கொடிகளைக் கையில் ஏந்தியவாறும் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை மறித்து அவருக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் முழக்கத்தை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.
Follow Us