கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்.பி. விமலா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மற்றொருபுறம், தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நடத்திய நீதிமன்றம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மீதும் அக்கட்சியின் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தது. அதே சமயம் நீதிபதியின் குற்றச்சாட்டை விமர்சித்து வீடியோ வெளியிட்ட 3 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அரசியல் விமர்சகரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான வரதராஜன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் காவல்துறை அதிகாரியும், அரசியல் விமர்சகருமான வரதராஜன், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசால் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
நீதிமன்ற அவமதிப்பு என்பதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, தனக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் விமர்சகர்களை முடக்கும் வேலைகளில் திமுக அரசு இறங்கிவிட்டதோ? என்ற சந்தேகம் நாளுக்கு நாள் நடக்கும் கைதுகளால் வலுக்கிறது. ஊடகம் என்றால் இருட்டடிப்பு, யூடியூபர், எதிர்க்கட்சியினர், தங்கள் துதி பாடத் தவறும் அரசியல் விமர்சகர் என்றால் உடனே கைது. இப்படி விமர்சனங்களை அதிகாரத் திமிரோடு அணுகும் திமுக அரசுக்கு கடும் கண்டனம். கைது செய்யப்பட்ட வரதராஜனை உடனடியாக விடுதலை செய்யுமாறும், விமர்சகர்களை ஒடுக்கும் நோக்கில் செயல்படும் பாசிசப் போக்கைக் கைவிடுமாறும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/08/admk-hq-1-2025-10-08-12-22-15.jpg)