2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, மாநிலத்தின் பிரதான அரசியல் கட்சிகள் இந்த ஆண்டு தொடக்கம் முதலே தீவிரமாகத் தயாராகி வருகின்றன. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் (விசிக), மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) ஆகிய கட்சிகள் மீண்டும் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. மறுபுறம், எதிர்க்கட்சியான அதிமுக, பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இந்த நிலையில் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் மூலம் அக்கட்சிக்குள் தற்போது கலகம் வெடித்துள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு விவசாயிகள் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படம் இல்லை என்று தனது அதிருப்தியை செங்கோட்டையன் முதன்முதலில் பொதுவெளிக்கு கொண்டு வந்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டங்கள் தவிர்த்தார். மற்றும் எடப்பாடியின் தீவிர ஆதரவு தலைவர்களுடனான நெருக்கைத்தை குறைத்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பாஜகவின் டெல்லி தலைமையின் தலையீட்டால் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையேயான பணி போரின் தாக்கம் சற்றும் மௌனமாகியது. இந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி கோபி அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செங்கோட்டையன் வருகிற 5 ஆம் தேதி (அதாவது இன்று) கோபியில் உள்ள புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேச உள்ளேன் என்றார்.
இதனையெட்டி, மேற்கு மாவட்ட அலுவலகத்திற்கு முன்னால் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். மேலும், அதிகளவில் தொண்டர்களும் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.