அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று (27.11.2025) காலை 10:00 மணியளவில் இணைத்துக் கொண்டார். சென்னையை அடுத்துள்ள பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைத்துக் கொண்டார். 

Advertisment

மேலும் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரும், அதிமுகவின் முன்னாள் எம்.பி.யுமான சத்யபாமா உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் ஒன்றிய, கழக, பகுதி நிர்வாகிகள், செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் வருகை தந்து த.வெ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனையடுத்து அக்கட்சியின் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். மேலும் ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். 

Advertisment

இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சென்னையில் இன்று (28.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “அண்ணன் செங்கோட்டையனை பொறுத்தவரையில் நான் அவரை பெரிய அளவில் மதிக்கக் கூடியவர். எனவே அவர் ஒரு முடிவெடுத்து த.வெ.க.வில் சேர்ந்திருக்கின்றார். என்னால் ஒரு கருத்துதான் சொல்ல முடியும். எங்கிருந்தாலும் வாழ்க. ஆனால் பொதுவாகவே என்னுடைய மனநிலை எப்படியென்றால் புலிக்கு வாலாக இருக்கலாம். புலி என்பது அதிமுக. ஆனால் எலிக்குத் தலையாக இருக்கக் கூடாது. எலி என்று யார் யாரைச் சொல்கிறேன் என்று தெரிந்து கொள்ளுங்கள். புலிக்கு வாலாக இருப்பதைத் தான் வாழ்நாளில் நான் பெருமையாகக் கருதுகிறேன். எலிக்குத் தலையாக இருந்து பிரயோஜனம் கிடையாது. அதனால் அது நடக்காத விஷயம். அதனால் இதுதான் எங்களுடைய நிலை” எனத் தெரிவித்தார்.