Advertisment

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான வழக்கு; தடை உத்தரவைத் திரும்ப பெற்ற உயர்நீதிமன்றம்!

eps-mic

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி (11.07.2022) சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து இந்த அறிவிப்பை எதிர்த்தும், பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி ஆகியோர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதோடு அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தது உள்ளிட்ட தீர்மானத்தை எதிர்த்து அதிமுக உறுப்பினர் என்ற முறையில் சூரியமூர்த்தி தனியாக உரிமையியல் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். 

Advertisment

அந்த மனுவில், “அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதுபோன்று கட்சி விதிகளைப் பின்பற்றாமல் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது சட்ட விரோதம். எனவே இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம், “தனக்கு எதிராக சூரியமூர்த்தி தொடர்ந்த இந்த வழக்கை  நிராகரிக்க வேண்டும்” என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தனக்கு எதிராக இந்த வழக்கைத் தொடர்ந்த சூரியமூர்த்தி அதிமுக உறுப்பினரே அல்ல. கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சியின் செயல்பாடு குறித்து எந்த ஒரு கேள்வியும் எழுப்ப முடியாது. எனவே அவருடைய மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த 4வது உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் கண்ணன் பிறப்பித்த உத்தரவில், “அதிமுக கட்சி விதிப்படி பொதுச் செயலாளர் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த விதிகளின் படிதான் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது தொடர்பாக எந்த விவரங்களும் இந்த மனுவில் தெரிவிக்கப்படவில்லை. எனவே சூரியமூர்த்தி தொடர்ந்த இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்” எனத் தெரிவித்தார். அதோடு சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்கக் கோரிய எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி எடப்பாடி பழனிசாமி மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி பி.வி. பாலாஜி நேற்று முன் தினம் (19.08.2025) உத்தரவிட்டிருந்தார். அதோடு இது தொடர்பான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் விசாரணை செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். 

Advertisment

hc

இத்தகைய சூழலில் தான், “இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதம் கேட்காமல் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது” என்று சூரியமூர்த்தி தரப்பில் கேவியட் ஏற்கனவே மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்து இன்று (21.08.2025) நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி பி.வி. பாலாஜி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், “ சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் அல்ல. இந்த வழக்கைத் தாக்கல் செய்ய அவருக்கு உரிமை இல்லை” என்று வாதிடப்பட்டது. அதற்கு சூரியமூர்த்தி தரப்பில், “இந்த வழக்கு தொடர்பாக கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளதை மறைத்து தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. 

இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நீதிமன்றத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்” என்று வாதிடப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கும், இந்த வழக்கை நிராகரிக்க மறுத்த உத்தரவுக்கும் இடைக்கால தடைவிதிக்கப்பட்ட அந்த உத்தரவு திரும்பப்பெறப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

admk Edappadi K Palaniswamy general secretary high court withdraw
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe