திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கை ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதாவது அதிமுகவின முதன்மை உறுப்பினர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவால் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது. அதே சமயம் சூரியமூர்த்தி தாக்கல் செய்த இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக் கூறி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும் உரிமையியல் நீதிமன்றம், எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது. இதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதன்படி இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஒருவர் எப்படி ஒரு கட்சிக்குள் இது போன்ற விவகாரங்களில் கேள்வி எழுப்ப முடியும் என எடப்பாடி பழனிசாமி தரப்பின் வாதங்களை ஏற்றுச் சூரிய மூர்த்தியின் மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டது. முன்னதாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருந்த உத்தரவு தொடர்பான மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சூரியமூர்த்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்றைக்கு (08.12.2025) மேல்முறையீட்டு மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்த மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான உத்தரவை எதிர்த்துத் தான் சூரியமூர்த்தி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அதிமுகவின் முதன்மை உறுப்பினர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவால் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us