தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன. அதோடு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் மனுக்களைப் பெறும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
மற்றொருபுறம் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தவுடன் கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதிலும் குறிப்பாக பல்வேறு கட்சிகளில் இருக்கும் அதிருப்தி தலைவர்களிடம் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில் அதிமுகவில் இருப்பவர்கள், அங்கிருந்து பிரிந்து சென்ற அதிருப்தி தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திப் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பெரிய அளவில் இணைப்பு விழா நடத்தி பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களையும் த.வெ.க.வில் சேர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக உரிமை மீட்புக் கழகத்தின் ஆதரவாளருமான ஜே.சி.டி பிரபாகர் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்துள்ளார். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
Follow Us