தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதே சமயம் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இத்தகைய சூழலில் 6 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக - பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், “கடந்த 1998 இல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தர். இதனால் திமுக கூட்டணி 14 ஆண்டுகள் ஆட்சியில்  இருந்தது. இவ்வாறு ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை ஆகும்.  சுப்பிரமணிய சுவாமியின் தவறான வழக்காடுதலால் ஜெயலலிதா இந்த வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டார்” எனப் பேசியுள்ளார். கடம்பூர் ராஜுவின் இந்த பேச்சு அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அதிமுக - பாஜக  இடையே கூட்டணி உறுதியான பிறகு சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைக்கும் விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி ஆட்சிதான் நடைபெறும் என்றும் பேசியிருந்தார். அதே சமயம் அதிமுகவைச் சேர்ந்த ஒருவர்தான் முதல்வராக இருப்பார் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.