தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான் சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமமுக மாணவர் அணி செயலாளராக இருந்த ஜீவிதா நாச்சியார் கலந்து கொண்டார். இதனையடுத்து ஜீவிதா நாச்சியாரைக் கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்குக் களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், மாணவியர் அணி செயலாளர் ஜீவிதா நாச்சியார் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
எனவே கட்சியின் உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாணவியர் அணி செயலாளராக, தனம் அபிநயா (சிவகங்கை மாவட்ட மாணவியர் அணி செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கட்சி உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/07/jeevitha-naachiyar-sasikala-2026-02-07-09-59-40.jpg)