தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisment

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை இராயப்பேட்டையில் உள்ள அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள தலைமைக் கழகத்தின் எம்.ஜி.ஆர். மாளிகையில், வரும் 31ஆம் தேதி (31.12.2025 - புதன்கிழமை) காலை 10 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பூத் கமிட்டி பணிகளை இன்னும் பல மாவட்டச் செயலாளர்கள் முடிக்கப்படாமல் இருப்பதன் காரணமாக, அது குறித்து விவாதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு சட்டமன்றத் தொகுதியின் கள நிலவரம் குறித்தும் கேட்டறிய வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.