கடந்த 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக ஏராளமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. அதே சமயம், இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது.
அதன்படி, விசாரணையைத் தொடங்கிய அருணா ஜெகதீசன், சம்பவம் நடந்த இடம், மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தினார். மேலும், சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டியிருப்பதால், அறிக்கை சமர்ப்பிப்பதில் காலதாமதமாகும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஏ.டி.எஸ்.பி. தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அனுமதி வழங்கப்பட்ட நேரத்தைத் தாண்டி காலதாமதமாக விஜய் பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கு வந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், தாங்கள் கேட்ட இடத்தில் அனுமதி தராமல், குறுகிய இடத்தில் அனுமதி வழங்கியதே இதற்குக் காரணம் என்று த.வெ.க. கூறுகின்றனர். இது தொடர்பாக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் மதியழகனைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த சூழலில், கரூர் சம்பவத்தால் விரக்தியடைந்த த.வெ.க. நிர்வாகி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த விற்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர், 52 வயதான அய்யப்பன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில், 29-ஆம் தேதி மாலை அய்யப்பன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி காவல்துறையினர், அய்யப்பனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, அவரது சட்டைப் பையில் இருந்த கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.
அதில், “கரூர் மாவட்டத்தில் விஜய் வருகைக்குப் போதிய பாதுகாப்பு இல்லை. அதில் விஜய் ரசிகர்கள் நன்றாக வேலை செய்தார்கள். செந்தில் பாலாஜி நூதன முறையில் நெருக்கடி கொடுத்து, அவர் மூலமாக இந்த துயர சம்பவம் நடைபெற்றது. காவல்துறையும் இதற்கு உடந்தையாக இருந்தது. அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/30/1-2025-09-30-16-07-55.jpg)