தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று (25-01-26) சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மாநில மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாலர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, “தேர்தலை நாம் எதிர்நோக்கி போகும் போது தவெக புதிய கட்சி, வெறும் பேன்ஸ் கிளப் என பொய் பிரச்சாரத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் திமுக, அதிமுக போன்ற கட்சிகளிடம் வேலை செய்து அவர்களது பொய்களை தெரிந்து கொண்டு இங்கு வந்திருக்கிறார்கள். இந்த பேன்ஸ் கிளப் தேர்தல் அனுபவமிக்கவர்கள். திமுகவிலும் தவெக ஆதரவாளர்கள் இருக்கிறார்கள், அதிமுக என எல்லா கட்சிகளிலும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அமைச்சர்கள் வீட்டிலும் எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என்பது முதல்வருக்கு தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் அமைச்சர்கள் வீட்டிலும் எங்களுடைய ஸ்லிப்பர் செல்கள் இருக்கிறார்கள். அண்ணன் திருமா அவர்களே, நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுக்கொள்ளுங்கள், ஆனால் உங்களுடைய கட்சி இங்கு மாறி ரொம்ப நாள் ஆகிவிட்டது. நீங்களும் 20 பேரும் மட்டும் தான் கட்சியில் இருக்கிறீர்கள். விசிகவில் 20, 30 தலைவர்கள் மட்டும் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் தொண்டர்கள் அனைவரும் இங்கு மாறிவிட்டார்கள்.
நம்மை எதிர்த்து திமுக கூட்டணியில் 13 கட்சிகள், அதிமுக கூட்டணியில் 8 கட்சிகள் இருக்கிறது. இன்னொரு நபர் பேசிக் கொண்டே இருப்பார், அவரை பற்றி நாம் பேச வேண்டாம். ஆக மொத்தம் 24 கட்சிகள். இந்த 75 வருடத்தில், அம்பேத்கரையும் பெரியாரையும் இணைத்த ஒரே கட்சி தவெக மட்டும் தான். தைரியம் இருந்தால் இதை முதல்வர் செய்வீர்களா? அறிவாலயத்தில் பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் இன்றைக்கு வரைக்கும் ஏன் சிலை வைக்கவில்லை. திருமாவளவனை திமுகவினர் அடியாளாக பயன்படுத்துகின்றனர். அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, அதிகாரத்துக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு. கொள்கை ரீதியாக எங்கு பா.ஜ.கவை எதிர்க்க வேண்டுமோ அங்கு நாங்கள் எதிர்ப்போம். நீட் பிரச்சனை, ஜிஎஸ்டி, இந்தி மொழி திணிப்பு என எதுவாக இருந்தாலும் எங்களுடைய குரல் முதலில் வரும். ஆனால், 2026இல் முதல் பிரச்சனை என்னவென்றால் உங்களுடைய நிர்வாக சீர்கேடு. நாங்கள் மதவாதத்தை எதிர்க்கிறோம், இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்.
திருமாவளவன், கம்யூனிஸ்ட் தோழர்கள், பெரியாரிஸ்ட் தோழர்கள் ஆகியோர் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி திமுக ஊழல் இல்லாத கட்சி என்று சொல்ல முடியுமா?. செந்தில் பாலாஜி ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் தோழர், புரட்சியாளர் அம்பேத்கரின் வாரிசு, நேரு பெரியாருடைய வளர்ப்பு பிள்ளை என்று உங்களால் சொல்ல முடியுமா?. கொள்கையை அமல்படுத்தக்கூடிய இடத்தில் யார் இருக்கிறார்கள்? பெரியாரை பற்றி இரண்டு நிமிடம் செந்தில் பாலாஜி பேசுவாரா? அம்பேத்கரை பற்றி நேரு பேச சொல்லுங்கள். பேசினால் நான் அரசியலை விட்டே போகிறேன். நம்மை பார்த்து மிரட்டினார்கள், பயந்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். யார் மிரட்டுகிறார்களோ அவர்கள் தான் பயப்படுகிறார்கள் என்று அர்த்தம், யார் அமைதியாக இருக்கிறார்களோ அவர்கள் தான் தைரியமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்” என்று பேசினார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/25/aadhavar-2026-01-25-13-42-32.jpg)