கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. தவெக தரப்பு நீதிமன்றத்தை நாடி சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கோரிக்கை வைக்க உள்ளது.

Advertisment

இந்நிலையில் சென்னையில் திமுக எம்.பி.கனிமொழி பேசுகையில், ''கரூர் துயரச் சம்பவம் நடந்துள்ள நிலையில் மக்களுக்காக தான் நிற்க வேண்டும். தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக இருக்கும். இன்னும் பிரச்சனை தூண்டுவது போல் சிலர் பேசுகின்றனர். தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் பதிவு உச்சகட்ட பொறுப்பின்மையை காட்டுகிறது. சிபிஐ விசாரணை வேண்டும் என யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். எனக்கு தெரிந்து ஒரு தனிநபர் கமிஷன் நியமிக்கப்பட்டு இருக்கிறது. விசாரணைக்கு அடுத்த நாளே வந்துவிட்டார்கள். விசாரணை தொடங்கி இருக்கிறது. அதை தாண்டி எப்படிப்பட்ட விசாரணைகள் வேண்டுமென்று நினைக்கிறார்களோ அதை கேட்கட்டும். அதைப் பற்றி மாறுபட்ட கருத்து இல்லை. 

Advertisment

கரூரில் இப்படிப்பட்ட துயரம் நடந்திருக்கக் கூடாது. இது யாரையும் குறை சொல்லும் நேரம் இல்லை. ஒரு ஆறுதல் கூட சொல்லாமல் ஒரு தலைவர் அங்கிருந்து செல்வது இதுவரை பார்த்திராத ஒன்று. சமூக வலைத்தளங்களில் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். அந்த குடும்பங்களின் வலி, ரணம், காயம் இன்னும் தீராத நிலையில் மேலும் விஷயங்களை சொல்லி மேலும் மேலும் வழிகளை உருவாக்கக் கூடாது''என்றார்.